Saturday, May 15, 2010

செட் ப்ராப்பர்டிகளாகும் சிறு தெய்வங்கள்


காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஒரு செய்தியை பெரிதுபடுத்துகிறார்கள் எனில் அவர்களுக்கு அதில் ஏதோ ஆதாயம் இருக்கிறது என்பதுதான் இப்போதைய சூழல். 

பிரச்சனைக்குரிய ஒரு விடயத்தில் அழகான பெண் அல்லது  திரைப்பட நடிகர்,  நடிகை இவர்களில் ஒருவருக்கு தொடர்பிருக்கிறது எனில், அவ்விடயத்தில் ஊடகங்களின் அக்கறையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

நீதிமன்றம் வரும்போதெல்லாம் அவர்களைப் படம்பிடித்து வெளியிட்டு அச்சு ஊடகங்கள் சர்க்குலேஷனை கூட்டிக்கொள்கின்றன. தொலைக்காட்சியினரோ டிஆர்பி எகிறக்கண்டு மகிழ்கிறார்கள். 

பார்வதி ஷா, ஜீவஜோதி, நித்யானந்தா விடயத்தில் ரஞ்சிதா என பல பெண்கள் தொடர் செய்திகளாகின்றார்கள். அழகான பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராகவும் நாம் போராடலாம். அதுவல்ல பிரச்சனை. அவர்கள் விடயத்திலும் உண்மையை வெளிக்கொண்டுவருவது ஊடகங்களின் நோக்கமல்ல. அதுபோலவே பாதிக்கப்பட்ட பெண் வத்தலும் தொத்தலுமான, ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவரெனில் அந்த அபலைகளுக்காக இந்த ஊடகங்கள் உண்மையாக ஏதும் செய்வதில்லை.

செய்தியாவதே தவிர்க்கப்படும்போது Follow-Up க்கு வேலையே இல்லை.  



இந்த வரிசையில் இப்போது காட்சிப் பொருளாக்கப்படுவது சிறுதெய்வங்கள். சன் டிவியில் நிஜம், ஸ்டார் விஜய்யில் குற்றம்: நடந்தது என்ன, ஜி தொலைக்காட்சியில் நம்பினால் நம்புங்கள். இப்படி பெயர்கள் பலவாயினும் இவர்கள் அனைவரது நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றுதான்.

தொடர்ச்சியாக நிகழ்ச்சியை ஓட்டமுடியாமல் காய்ந்து கிடக்கும் இவர்கள், காட்சி மொழியில் மிரட்டலாக எதையாவது காட்டி எபிசோடை நீட்டிக்கிறார்கள். அப்படி மிரட்டுவதற்கு ஏதும் இல்லாத நிலையில் கம்பீரமாக நிற்கும் சிறு தெய்வங்களைக் காட்டி பிழைப்பை ஓட்டுகிறார்கள். 

இவர்கள் வேறென்ன செய்வார்கள்.ஊத்தைவாய் சங்கரமட பாப்பானை விட்டு விட்டார்கள். சொர்ணமால்யாவால்தான் அந்த பிரம்மச்சாரிக்கு மவுசு. பெருந்தெய்வ வழிபாடுகளில் காட்டுவதற்கு சிவன் ஒரு சொங்கிப்பயல் போலும். அவனையும் காட்ட ஒன்றுமில்லை. நீதா அம்பானியின் பெயரைக் கேட்டால் வெங்கடாசலபதியும் நள்ளிரவில் கதவைத் திறந்துவைக்கிறார். இரண்டு நாட்கள் செய்தியானார்.


இந்த நிலை சின்னத்திரையில் மட்டுமல்ல. தமிழ்ப்படத்தில் கூட ஒரு கிராமத்தின் எல்லையில் செட் ப்ராப்பர்டியாக சிறுதெய்வம் இருப்பதைக் கராபிக்சில் காட்டி கிண்டல் செய்கிறார்கள். 

ராம் படத்தில் அரைவேக்காடு அமீர் உருவாக்கிய ஆன்மிக half-boil கதாநாயகன் ஒருபாடலில் சிறுதெய்வ வழிபாடு நடத்துபவர்களிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி அவர்களை விரட்டுகிறார். 

எளிய மக்களின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தும் பணியைத்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் செய்கின்றனவேயன்றி, மக்களது வாழ்வியலின் ஊடாகச் சென்று அவற்றை ஆவணப்படுத்துவதில்லை.

இந்த மாதிரி க்ரைம் நிகழ்ச்சிகளில் சாதாரணமாக ஒரு குழந்தை பிறந்த தகவலைக்கூட குற்றச் செயல்போல் அழுத்தமான குரலில் பேசி மிரளவைக்க முயற்சிக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் விஜய் டிவியினர், அமானுஷ்ய கதைகள் உங்கள் பகுதியில் ஏதாவது கிடைக்குமா? என்று கேட்டார்களாம். இதை என்னிடம் சொல்லிவிட்டு, " அப்படியெல்லாம் சொல்லிர  முடியாதுல்ல" என்றார் சொரணையுள்ள அந்த நண்பர்.

வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு:
  • ஆளும் அரசின் அதிகாரத்திற்கெதிராகவும் ஊழல் குறித்தும் புலனாய்வு செய்து செய்தி வெளியிட வக்கில்லாத, துணிவில்லாத, புத்தியில்லாத சின்னப்பயல்களால் தயாரிக்கப்படுவதுதான் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.
  • இப்படிப்பட்டவர்கள் அடுத்தமுறை படம்பிடிக்க வந்தால் படம் பிடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு கெடாச்சோறு போட்டு அனுப்பலாம்.


Friday, May 14, 2010

எம்மைப்பற்றி

வணக்கம் வலையுலக நண்பர்களே!

நெடுங்காலமாய், ஊடகம் சார்ந்த எமது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்ய ஒரு வலைப்பூ தேவையென நினைத்திருந்தாலும் இப்போதுதான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக அது முடிவாகியிருக்கிறது.

அரசியல் சார்பற்று, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அனைவரையும் வெளுத்து கொடியில் காயப்போடுவதே எமது நோக்கம்.

கருத்து சார்புள்ள, சார்பற்ற அனைவரும் எமது கருத்துரிமைக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

மிக்க அன்புடன் 
வெட்டு 1 துண்டு 2.